2K கிட்ஸின் அனிமே உலகம்! ( Anime artical ananda vikatan ) Tamil 05 April 2023

 2K கிட்ஸின் அனிமே உலகம்!


2K கிட்ஸின் அனிமே உலகம்!

இந்தியாவின் ‘ராமாயணா தி லெஜண்ட்' என்ற அனிமே ஜப்பானியக் கலைஞர்களின் உதவியோடு முதன்முதலில் வெளியிடப்பட்டது. அதுபோல பெங்காலி மொழியில் அனிமேக்கள் உருவாக்கப்பட்டுள்ளன

“Dattebayo” என்னும் ஜப்பானிய வார்த்தை சென்னை குரோம்பேட்டையில் மன அழுத்தத்தில் இருந்த ஒரு நபருக்கு தெரபியாக மாறியுள்ளது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன, அது எங்கிருந்து வந்தது என்ற தேடலில் விரிகிறது சுவாரசியமான ஜப்பானிய கார்ட்டூன் கலாசாரம். மன்னிக்கவும், இதை கார்ட்டூன், பொம்மைப் படம் என்று கூறினால் சண்டைக்கு வருகிறார்கள் இதன் ரசிகர்கள். இதனை Anime (அனிமே / அனிம்) என்றுதான் சொல்ல வேண்டுமாம்.

90’ஸ் கிட்ஸ்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளிவந்த Pokemon, Dragon Ball Z-களின் மீள் வடிவம்தான் இந்த அனிமே. பொதுவாக கார்ட்டூன் என்றாலே குழந்தைகளுக்கானது என்ற எண்ணம் இருக்கிறது. அமெரிக்க கார்ட்டூன்களிலிருந்து ஜப்பானிய அனிமேக்கள் இந்த இடத்தில்தான் மாறுபடுகின்றன. இவை எல்லா வயதினருக்குமான கதைகளைக் கொண்டவை.


2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

‘பொம்மைப் படம்தானே’ என்றால், ‘‘ரெண்டு எபிசோட் பார்த்துட்டுப் பேசுங்க’’ என்று கோபப்படுகிறார்கள் ஒட்டாக்குகள். ஒட்டாக்கு (Otakku) என்ற ஜப்பானிய வார்த்தைக்கு ‘அனிமே காதலர்கள்’ என அர்த்தம். அனிமேயின் ஈர்ப்பால் நம் ஊரில் பலர் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்கிறார்களாம். அதற்காக நடத்தப்படும் யென் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து, ஜப்பானிய மொழியில் பாடலே பாடுகிறார்கள் என்கிறார் ராகவ் எனும் Weeb (அனிமே காதலர்).

‘‘உலகம் வேகமா போயிட்டிருக்கு. அதுல நடக்குற சின்னச் சின்ன சுவாரசியங்கள நாம கவனிக்குறது இல்ல. அத இந்த அனிமேக்கள் கவனிக்க வைக்கும். அனிமே சாதரணமா உருவாகுறது இல்ல. அதுக்குப் பின்னாடி பெரிய உழைப்பு இருக்கு. ஒரு நொடிக்கு 12 Frame கையால வரைஞ்சு கொண்டு வராங்க. அதனாலதான் அதோட அழகியல் எல்லாரையும் ஈர்க்குது. அனிமே பார்க்க ஆரம்பிச்சுட்டா இந்த உலகத்துல நாம ஏன் இல்லன்னு ஒரு ஏக்கத்த உங்களுக்கே தந்துரும்’’ என்ற ராகவிடம் ‘மொத்தம் எத்தனை எபிசோடு’ என்று கேட்க, அவர் சொன்ன பதில் நம்மை மலைக்க வைத்தது.

2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

“ ‘நருட்டோ’ன்னு ஒரு அனிமே சீரிஸ் 18 வருஷமா வெளியாகி 720 எபிசோடு வந்துருக்கு’’ என்றார். நாம் அதிர்ச்சியாக, ‘‘இதுக்கே ஷாக் ஆகறீங்களே! 1998-ல இருந்து இப்ப வரையும் தொடர்ந்து 1,060 எபிசோடு தாண்டி ‘one piece'ன்னு ஒரு சீரிஸ் போய்க்கிட்டிருக்கு. சீரிஸ் பார்க்குற ரசிகர் மத்தியில நருட்டோவுக்கும் onepiece-க்கும்தான் போட்டியே’’ எனச் சிரிக்கிறார் ராகவ்.

இயற்கைக்கும் கலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடு ஜப்பான். புத்தரையும் கடலையும் வரைவதில் பேரார்வம் கொண்டவர்கள். ஜப்பான் காமிக்ஸின் தந்தை ஒஸுமா டெசுக்கா 8 பாகங்களாக வரைந்த புத்தரின் வாழ்க்கை வரலாறு பல பதிப்புகளைக் கடந்து இன்றும் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஹோக்குகாய் வரைந்த ‘தி கிரேட் வேவ்’ ஓவியம் இன்றளவும் ஒரு மாஸ்டர் பீஸ். அதன் நீட்சிதான் இன்று 2K கிட்ஸ்களிடம் பிரபலம் அடைந்துள்ள Demon Slayer என்னும் அனிமேயில் வருகின்ற கடல். அதன் சில நிமிடக் காட்சிகளுக்குப் பல லட்சங்கள் செலவு செய்யப்படுகின்றன.

2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

அனிமே உருவாகும் விதமே படு சுவாரசியம். ஒரு அனிமே வருவதற்கு முன்பு அது மங்காவாக வந்திருக்க வேண்டும். மங்கா (Manga) என்றால் ஜப்பானிய காமிக்ஸ். ஒரு மங்கா வெளியாகி ஹிட்டடித்த பிறகே அது அனிமேயாக மாறும். மங்கா ஒருபுறம் கதையாக வந்து கொண்டிருக்க மறுபுறம் அது படமாகும். மங்கா தயார் ஆவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் ஃபில்லர்ஸ் (Fillers) என்று அதை நிரப்பக்கூடிய கதைக்கு சம்பந்தமில்லாத சில எபிசோடுகளும் அதற்கு நடுவே போடப்படும். நருட்டோ சீரிஸில் பல ஃபில்லர்ஸ் உண்டு. ‘பொன்னியின் செல்வன்’ பார்த்துவிட்டு ‘‘நாவலைப் போல இல்ல’’ எனச் சொல்லும் இலக்கிய வட்டாரம் போல, ‘‘One Piece அனிமே, மங்கா புத்தகத்தில் வந்ததுபோல இல்ல’’ என்கிறது அனிமே வட்டாரம்.

அனிமே மோகத்தினால் தங்கள் பெயருக்குப் பின்னால் நவீன் உசுமாக்கி, பிரவீன் ஹிட்டாச்சி என்று அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், ‘waifu’ என்று அனிமேயில் வரும் பெண் கதாபாத்திரத்தை முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

‘யாருப்பா நீங்கெல்லாம்’ என்ற கேள்வியோடு ‘ஷும்மி வண்ணக் காவியங்கள்’ எனும் தமிழ் podcaster-களில் ஒருவரிடம் பேசினேன். அந்த podcaster-கள் அனைவரும் தங்கள் இயற்பெயரைத் தவிர்த்து நருட்டோ அனிமேயின் கதாபாத்திரங்களின் பெயரையே தங்களின் அடையாளமாக வைத்துள்ளார்கள். அதில் ஒருவரான ஹாசிராம செஞ்சு, அந்தக் கதாபாத்திரத்தின் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.

‘‘நருட்டோல வர்ற ஒரு கதாபாத்திரம் தான் ஹாசிராம செஞ்சு. அவர் ஒரு இனக்குழுத் தலைவர். பல காரணங்களால பிரிஞ்சு இருக்கிற இனத்த, ஒரே அமைப்பா ஒற்றுமையா சேர்த்து வைப்பாரு. உரிமைக்காகப் போராடுன பல தலைவர்கள அது ஞாபகப்படுத்தும். அதனாலதான் இந்தப் பேரு வச்சிருக்கேன். காலேஜ் படிக்கும்போது death note பத்தி எல்லாரும் பேசவும், அத பார்க்க ஆரம்பிச்சேன். மரணத்தை உண்டாக்குற கடவுளோட புத்தகம் தவறிக் கீழ விழுந்து, அது ஒரு சின்னப் பையன் கிட்ட கிடைக்குது. அத வச்சு அவன் என்ன செஞ்சான்றதுதான் கதை. (இது ஏதோ தமிழ்ப் படம்னு உங்களுக்குத் தோணுற மாறி அவங்க சொன்ன பல கதைகள் எனக்கும் பல படங்களை ஞாபகப்படுத்துச்சு). அது தந்த சுவாரசியத்துல தேடித் தேடி அனிமே பார்க்க ஆரம்பிச்சேன். 400 எபிசோடு வரை ஒருத்தன கெட்டவனா காட்டிட்டு, பின்கதைய சொல்லும்போது அவனுக்காக நாம கண்ணீர் விட முடியும். உலகத்துல எல்லாமே மன்னிக்குற அளவுக்கு சாதாரண பிரச்னைதான்னு தோணும். ‘Attack on Titan'னு ஒரு அனிமே சீரிஸ். ஒரு குட்டித் தீவு, அதச் சுத்தி ஒன்னுக்குள்ள ஒன்னா அஞ்சு சுவரு. அதுல வேலை செய்யுற மக்கள் ஒரு சுவருக்குள்ளவும், கடைசி சுவருக்குள்ள அதிகாரத்துல இருக்கவனும் இருப்பாங்க. இப்படி ஒரு அரசியலை எந்தக் கலைப் படைப்பும் பேசியிருக்காது. இதெல்லாம் தாண்டி பிரமாண்டத்துக்காகவே பார்க்கலாம்’’ என்றார்.

2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

இரண்டாம் உலகப்போரில் சிதைந்துபோனது ஜப்பான். இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் இன்று எல்லாத் துறைகளிலும் ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இருக்கும் ஜப்பான் எப்படி ஒரு புது உலகமோ, அனிமேக்களும் அவ்வாறு புதுப்புது உலகங்களை உருவாக்கியபடி இருக்கின்றன. அவர்களின் சாமுராய் கலாசாரத்தில் இருக்கும் ‘தன்னம்பிக்கை’, அனிமே படைப்புகளிலும் தொடர்கிறது.

‘‘Hayao Miyazaki-யின் ‘The Spirited Away’ பார்த்தா இந்த உலகத்தை நீங்க பார்க்குற பார்வையே மாறிடும். அனிமே பார்க்க நினைக்கிறவங்க இங்க இருந்து தொடங்கலாம். அடுத்து Isao Takahataவோட ‘Grave of the Fireflies’ பார்த்தா போர் எவ்ளோ கேவலமானது, அதனால சாமானியர்களும் குழந்தைகளும் எவ்ளோ கஷ்டப்பட்டி ருப்பாங்கன்னு தெரியும். ‘கார்ட்டூன் வன்முறைய திணிக்குது’ன்னு சொல்றவங்க, தங்கள் குழந்தைக்கு இதப் போட்டுக் காட்டணும். அவ்ளோ அன்ப அவங்க மனசுல விதைச்சுரும். ‘Bersereck'னு ஒரு மங்கா, அதப் படிச்சா இங்க ஒவ்வொருத்தரோட இருத்தலும் யாரோ ஒருத்தர வாழ வச்சுட்டிருக்குன்னு புரியும். இப்படி அனிமே ஒரு பெரிய நம்பிக்கையையே உருவாக்குது. இப்ப சமூகத்துல பெரிய பிரச்னையே மன அழுத்தம்தான். அதுக்கு நிவாரணியா ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயம் இருக்கும். எனக்கு அனிமே. மோட்டிவேஷன் புத்தகத்த தூக்கிப் போட்டுட்டு அனிமே பாருங்கன்னு சொல்லுவேன்’’ என்கிறார் ஊடகவியலாளராக இருக்கும் பிரவீன்.

2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

அனிமேக்களில் வரும் பல காட்சிகளைத் திருடி உலகத்திரைப்படங்களில் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். Paprika அனிமே படத்தின் அப்பட்டமான காப்பிதான் கிறிஸ்டோபர் நோலனின் ‘Inception.' ‘Perfect Blue' எனும் அனிமேவின் தழுவல்தான் ‘Black Swan’ என இந்தப் பட்டியல் நீள்கிறது.

‘‘அனிமே பெரிய ஹிட்டடிக்க கொரோனாதான் காரணம். அப்போ இருந்த தனிமை, அடுத்து என்னன்ற நிலையற்ற தன்மை, அன்புக்காக ஏங்குற மனிதர்கள்னு இருந்த சூழல் அப்படியே நருட்டோ வாழ்க்கையோட பொருந்தும். அவன் அப்பா அம்மா இல்லாம வளர்ந்தவன். சமூகத்தால புறக்கணிக்கப்பட்டவன். ஆனா யார் மேலும் வெறுப்ப காட்டாம அன்பு செலுத்தி, ஒன்பது வால் நரிகூடச் சேர்ந்து எதிரிய ஜெயிச்சுக் காட்டுவான். எனக்கெல்லாம் கஷ்டம் வந்தா நருட்டோவ விடவா கஷ்டப்பட்டுட்டோம்னு தோணும். அந்த நேரம் ‘Dattebayo’ன்னு நருட்டோவோட மந்திரம் சொல்லிட்டு அவனுக்கு ‘Arigatou’ சொல்லுவேன்’’ என்று பேசி முடித்த கோயெழிலியிடம் அர்த்தம் கேட்டேன். ‘Dattebayo’ என்றால் ‘உன்னை நம்பு', ‘Arigatou' என்றால் ‘நன்றி', ‘Kami' என்றால் ‘கடவுள்', ‘Jinsei' என்றால் ‘உயிர்', ‘Wakatta' என்றால் ‘புரிகிறதா' என்று பல ஜப்பானிய வார்த்தைகளின் அர்த்தங்களைச் சிரித்துக்கொண்டே கூறியவர் பயோ டெக்னாலஜி துறையில் ஆய்வாளராக இருக்கிறார்.

2K கிட்ஸின் அனிமே உலகம்!
2K கிட்ஸின் அனிமே உலகம்!

இதன் சந்தை மதிப்பைப் பார்த்த நெட்பிளிக்ஸ், Crunchy Roll எனப் பல ஓ.டி.டி தளங்கள் இப்போது அனிமேக்களை வெளியிடுகின்றன. பி.வி.ஆர் திரையரங்கம் அப்படங்களைத் திரையிடத் தொடங்கியுள்ளது. சென்ற மாதம் வெளியான ‘Red’ எனும் அனிமே ஒரு வாரம் ஹவுஸ்புல் ஷோவாக ஓடிப் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது டிமோன் ஸ்லெயர் என்னும் அனிமே திரைப்படம் ‘ஒட்டாக்கு நாடு’ என்னும் குழுவால் திரையிடப்பட்டுள்ளது.

‘‘பலர் அந்த அனிமே கதாபாத்திரமாகவே டிரஸ் போட்டுட்டு வந்து ‘cosplay’ பண்ணுனாங்க. படம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஜப்பானியப் பாடல வயலின் வாசிச்சுட்டே எல்லாரும் சேர்ந்து பாடுனது வித்தியாசமா இருந்துச்சு. கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ்ல இப்போ ‘cosplay’ பண்ணுறது மாணவர்கள் மத்தியில் கலை நிகழ்ச்சியாவே நடக்க ஆரம்பிச்சுடுச்சு. நான் 30 வயசுக்கு மேலதான் அனிமே பார்க்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல தனியாதான் உக்காந்து பார்ப்பேன், ‘என்னடா பொம்மப் படம் பாத்து அழுவுறான்’னு கிண்டல் பண்ணிருவங்களோன்னு! இப்போ யாராவது அப்படிப் பேசினா ‘அனிமே பார்த்துட்டு அப்புறம் கிண்டல் பண்ணு’ன்னு சொல்றேன்’’ என்கிறார் இயக்குநர் விஜய் வரதராஜ்.

விஜய் வரதராஜ்,  ராகுல்,  ராகவ், பிரவீன், கோயெழிலி, ஹாசிராம செஞ்சு
விஜய் வரதராஜ், ராகுல், ராகவ், பிரவீன், கோயெழிலி, ஹாசிராம செஞ்சு

அனிமேக்களில் வரும் உடைகளைத் தைப்பது, அதில் வரும் உடைவாள்களை மரத்தில் செதுக்குவது, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது என Cosplay-க்கான பொருள்களைச் செய்து விற்றுவருகிறார் வேலூரைச் சேர்ந்த ராகுல். ‘‘Cosplay நிகழ்வுகள் மும்பை, டெல்லி, பெங்களூரில் நடைபெறுகின்றன. பெங்களூருக்குப் பெரும்கூட்டம் சென்னையிலிருந்து செல்கிறது’’ என்கிறார் ராகுல்.

இந்தியாவின் ‘ராமாயணா தி லெஜண்ட்' என்ற அனிமே ஜப்பானியக் கலைஞர்களின் உதவியோடு முதன்முதலில் வெளியிடப்பட்டது. அதுபோல பெங்காலி மொழியில் அனிமேக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் ஒட்டாக்குகள்.

‘காமிக்ஸ் என்பது உலக மொழி. அது எல்லைகளையும் தலைமுறைகளையும் கடந்து நிற்கக் கூடியது’ என்றார் ஒஸுமா டெசுக்கா. அதை நிரூபிக்கிறார்கள் நம் 2K கிட்ஸ்.

Post a Comment

0 Comments